Wednesday, July 28, 2010

காதலா, காமமா ?


நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா ?

இல்லை,
செழித்து வளரும்
தளிர்களைக் காணும்
ஆட்டுக் குட்டியின் ஆசைதான்
எனதா ?

உன் விழிகள்,
உன் இதழ்கள்,
உன் கன்னங்கள்
இவை
இப்படி இல்லாதிருந்தாலும்
நான்
இப்படியே தான் இருந்திருப்பேனா ?

நான்
காதல் மயக்கத்திலா ?
இல்லை
காதல் தெளிவிலா ?

நினைவுகளாலோ
விரல்களாலோ
உன்னை
உரசிப்பார்க்காதபோதும்
எனக்குள் அணையாமல் கிடக்கிறதா
இந்த காதல் ?

இல்லை
தொடுதல் ஆசையில் தான்
தொடர்ந்து வருகிறதா ?

எப்படித் தெரிந்து கொள்வது
நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா
என்பதை ?

நீயே சொல் பெண்ணே,
நான் மறுத்தால்
உன் இரவுகள் நொறுங்குமா ?
உன்
பகல்கள் படுகாயப் படுமா ?

(நன்றி சேவியர் )

காதல் என்பதற்கு வேறென்ன பொருள் இருக்கிறது?


காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும், தமிழ் மொழியாகவே வைத்துக் கொண்டாலும் - அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறு விதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.

மற்றபடி, தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் பெண் சேர்க்கை - கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும், இக்கருத்துகளையேதான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர, காதலுக்கென்று வேறு பொருளில்லை. ஆதலால் இவைகளின்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள், அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

இந்தப் படியும் கூட ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணிடம் காதல் ஏற்பட்டு, அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் - வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர, வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை - திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தை கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போகபோக்கியத்திற்கு பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டே தான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது, இவன் அறிந்தது உண்øமயாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்டதாக இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக, ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஓர் ஆண் பார்க்கிறான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கிறாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஓர் அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டு போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல், தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லி விட்டால், அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு, “மறு ஜென்மத்திலும் இவனை விட்டுப் பிரியக் கூடாது” என்று கருதிவிடுகிறாள். 4ஆம் நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும்.

இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாயோ, தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக்காதல் பயன்படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப் போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால், உண்மைக் காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.

அன்பு, ஆசை, நட்பு


அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர, வேறு ஒரு பொருளைக் கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை, ஆண் - பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, அநாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து, காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.

ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து, ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் - காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால், அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது, இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம் என்பவைகளைத் தெரிந்து, ஒரு முடிவு கட்டிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள் - ‘‘காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல; அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு; காதல் வேறு, நட்பு வேறு என்றும்; ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும். அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும். ‘‘அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை'' என்றும்; ‘‘அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்; அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது'' என்றும், பிறகு வேறு ஒருவர் இடமும் அந்தக் காதல் ஏற்படாது.

‘‘அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, அது ஒருக்காலும் காதலாகாது'' என்றும்; ‘‘ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது'' என்று சொல்லப்படுகின்றது. மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.

ஆனால், இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும், மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றேதான் கருதவேண்டி இருக்கின்றது.

அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் - ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் - அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் சொல்ல வேண்டும்.

காதல்: மானுடத்தின் வளர்ச்சிக்கு

காதல்; (love) என்பது கடவுள் தன்மை (godliness) அல்லது காதல் என்பது உண்மை (truth) என ஓசோ கூறுகின்றார். காதல்; கண்டவர் கடவுளை அல்லது உண்மையைக் கண்டவர் என்பது அவரது அனுபவம். இவர் தன் பெரும்பான்மையான சொற்பொழிவுகளில் மனிதரில்; காதல் உணர்வை வளர்ப்பது எவ்வாறு? அதன் நன்மைகள் என்ன? காதல் எவ்வளவு உயர்வானது, என்பது தொடர்பாகவே கூறியுள்ளார். இதற்கு காரணம்,
காதல் இல்லாத ஒரு வாழ்வை ஒருவரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதளவு கசப்பானது. காதல் இல்லாத மனிதர் தனித்து (lonely) நிற்பவர். இது இவரது தன்முனைப்பு (ego) மட்டுமே. இவருக்கு மனிதர்களுடன் உறவு இருக்காது. இவரது வாழ்க்கை இறப்புக்கே வழிகுக்கும். ஏனனில் வாழ்க்கை என்பது மனிதர்களுக்கு இடையிலான உறவில் (interrelated) அமைந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிலும் (interdependent) தங்கியிருப்பது இயற்கையின் நியதி.
தவிர்க்கப்படமுடியாதது..

காதல்;; இன்மை மிகப்பெரிய வறுமை. யார் ஒருவர் தன்னில் காதலை வளர்க்கவில்லையோ
அவர் தானே உருவாக்கிய நரகத்தில் வாழ்கின்றார். காதல்;; நிறைந்த மனிதர் சொர்க்கத்தில் வாழ்கின்றார். அதாவது நரகமும் சொர்க்கமும் நாம் பார்க்கும் பார்வையின் அடிப்படையில் அமைந்தது. மாறாக இந்த பூமிக்கு கீழே நரகமோ மேலே சொர்க்கமோ இல்லை. இந்த பூமியை சொர்க்கமாகவும் பார்க்கலாம் நரகமாகவும் பார்க்கலாம். சக மனிதர்களைக் கடவுளாகவும் பார்க்கலாம் பேய்களாகவும் பார்க்கலாம். அனைத்தும் நம் பார்வையிலையே தங்கியுள்ளது. நம் பார்வை நமது ஆன்மாவின் உயர்வில், வளர்ச்சியின் (mature) அடிப்படையில் உள்ளது.

மனித இனம் நோய்யுற்று இருப்பதற்குக் காரணம் காதலின் பற்றாக்குறையே. மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் காதலுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவருக்கும் காதலை எவ்வாறு பெறுவது என்றோ அல்லது வழங்குவது என்றோ தெரியாதவர்களாக, முடியாதவர்களாக இருக்கின்றனர்.

காதல் சாத்தியமில்லத ஒன்று அல்ல. காதல் மிகவும் சாதாரண விடயம். காதல் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கின்றது. நம்மில் குடிகொண்டிருக்கும் காதல் வளர்ந்து மலர்வதற்காக காத்திருக்கின்றது. எவ்வாறு நம் காதலை மலரச் செய்வது? உடலுக்கு உணவு போல், ஆன்மாவுக்குத் தேவை காதல். உணவில்லாது உடலால் எவ்வாறு வாழமுடியாதோ அதேபோல் காதலின்றி ஆன்மாவால் வாழமுடியாது. உண்மையில் காதல் இன்றி ஒரு ஆன்மா பிறப்பதே இல்லை. அப்படியிருக்கும் பொழுது காதல் இல்லாத ஆன்மாவின் வாழ்வைப் பற்றி எப்படிச் சிந்திப்பது?

நம் எல்லோரிலும் காதல் எனும் விதை வாழ்கின்றது. ஆனால் நாம் அதை வளரவிடுவதில்லை. இதற்கு காரணம் காதலுக்கு எதிரான நமது சமூகங்களினதும் சமயங்களினது சிந்தனைகளும் கட்டுப்பாடுகளும் மட்டுமல்ல நமது பண்பும் என்பது தவிர்க்கப்பட முடியாதது. காரணம் நாம் எப்பொழுதும் காதலைத் தேடுகின்றோம். ஆனால் வழங்குவதற்குத் தயாராக இல்லை. காதல் வழங்கும் பொழுதே வளர்கின்றது. யார் ஒருவர் தன்முனைப்பை (ego) கைவிடுகின்றாறோ அவருக்கு மட்டுமே காதலுக்கான கதவுகள் திறக்கின்றன. ஒருவருக்காக தன் தன்முனைப்பைக் கைவிடும் பொழுது காதல் பிறக்கின்றது.
எல்லாவற்றுக்குமாக தன் தன்முனைப்பைக் கைவிடும் பொழுது தெய்வீகக் காதல் பிறக்கின்றது. இதுவே மிக உயர்வான காதல் (compassion). காதல் காமத்தின் மீது கொண்ட விருப்பமல்ல. இவ்வாறு சிந்தித்து தவறு இழைப்பவர்கள். காதலின்றியே வாழ்கின்றனர். காதலின் பாதையில் காமம் ஒரு கடவை மட்டுமே. இது இயற்கையானது.

காதல் ஒரு உயர்ந்த நிலையிக்குச் செல்லும் பொழுது காமம் மறைந்துவிடுகின்றது. அதாவது காம சக்தி காதலாக மாறுகின்றது. காதலின் கீழ்நிலையிலிருக்கும் வடிவம் காமம் (sex). காதலின் (love) மிகவும் சுத்தமான உயர்நிலை வடிவம் அன்பு (compassion).

காமத்தின் அடிப்படையில் உடல்கள் சேர்கின்றன. அன்பின் அடிப்படையில் ஆன்மாக்கள் சந்திக்கின்றன. அன்பும் (compassion) காமமும் (sex). கலந்த இடைநிலையானது காதல் (love).

காதலின்போது (love) எமக்குத் தந்ததமைக்காக மற்றவருக்கு நன்றி கூறுகின்றோம்.
அன்பின்போது (compassion) நாம் வழங்கியதை மறுக்காமல் பெற்றமைக்காக மற்றவருக்கு நன்றி கூறுகின்றோம். மற்றவர்களுக்கு வழங்குவதற்காக நாம் பல சக்தியுடன் (energy) இங்கு பிறந்திருக்கின்றோம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக பல மலர்களுடன் இங்கு வந்திருக்கின்றோம். வாழ்கின்றோம்.

நான் தனித்;து (lonely) இருக்கின்ற ஒரு காரணத்திற்காக மற்றவரின் உறவை நாடுவது அழகானதல்ல. மற்றவரை பயன்படுத்துவதாகும். மற்றவரும் அதற்காகவே நம்மைப் பயன்படுத்துவார். ஆனால் ஒருவரும் தான் பயன்படுத்தப்படுவதை விரும்பமாட்டார்.
இதுவே இன்றைய உறவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்பதை நாம் அறியாது வாழ்கின்றோம். நாம் தனிமையில் (alone) இருப்பதற்கு கற்க வேண்டும். நம்மை சகல குறை நிறைகளுடனும் ஏற்றுக்கொள்ள (acceptance) வேண்டும். இதுவே நம்மை நாம் காதலிப்பதற்கு வழிவகுக்கின்றது.
தனிமையில் (alone) இன்பமாக இருக்க தெரிந்து கொண்டோமானால் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து விடுவோம். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது
பகிர்வதற்கு (to share) வழங்குவதற்கு (to give) நம்மிடம் ஏதோ உள்ளது. மகிழ்ச்சியை வழங்குவதற்கு பகிர்வதற்கு நமக்கு தெரியுமானால் நமக்கு மேலும் மகிழ்ச்சி கிடைக்கும்.
இதுவே ஒருவரை காதலிப்பதற்கான தேவையை உருவாக்கின்றது. இது மட்டுமின்றி மற்றவரையும் அவருடைய குறை நிறைகளுடன் அவரை அவராக ஏற்றுக்கொள்ளவும் வைக்கின்றது. ஆனால் நாம் மற்றவர்கள் நம்மைக் காதல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இது குழந்தைத் தனமானது. வளர்ந்த (mature) மனிதர் மற்றவர்களின் தேவையைப் புரிந்து கொள்பவர். ஆகவே நம்மை நாம் காதல் செய்யப் பழகுவோம். நம் காதலை வளர்த்தும் பெருக்குவோம். நம் காதல் பூத்து மலரும் பொழுது பிறருடன் பகிர்ந்து வழங்கி மகிழ்வோம். இதற்கு முதல் அடிப்படை தியானம். இதுவே நம்மில் நமக்கு அன்பை ஊட்டி வளர்க்கும்.

காதல் ஒரு கவிதை கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது காதல் இயற்கையான ஒரு சமயம்.

காதலில் விழுவோம்
காதலில் எழுவோம்
காதலில் உயர்வோம்
காதலில் பறப்போம்

காதல் என்பது ஓசோவின் சொற்பொழிவுகளில் மூச்சைப்போல் இரத்த ஓட்டம் போல் இருந்து கொண்டே இருக்கும். காதலில் சகல பரிமாணங்களையும் இவர் ஆராய்ந்து நமக்கு வழிகாட்டியுள்ளார்.

காமம் – ஓசோவின் சிந்தனைகள்


இது ஒரு சக்தி. வாழ்க்கைச் சக்தி.

இயற்கையானது.



ஆனந்தமானது அனுபவிக்க. ஒரு பாவமும் அறியாதது.



ஒரு தவறும் இதில் இல்லை.

வாழ்க்கை இருப்பதும் வளர்வதும்

காமம் என்ற அடிப்படைச் சக்தியினால். நாம் காமத்தால் பிறந்தவர்கள். நம் ஒவ்வொரு அணுக்களிலும் காமம் சக்தியாக உள்ளது.



இதை அறிந்தே ஓவ்வொரு சமூகமும்

இயற்கையுடன் கலந்து பிரபஞ்சமாகவே மாறியிருப்போம். இந்த நிலையே தன்மையே உச்ச இன்பத்தை தருகின்றது. இதைக் காம கலவையில் சிறிது நே
ரம் மட்டும் பெறுவதால் நாம் சிற்றின்பம் எனக் கூறி குறைந்த மதிப்பை வழங்கிவிட்டோம். இந்த உச்ச இன்பத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிப்போரே பேரின்பம் பெற்ற ஞானிகள் என ஆன்மீகத்தில் கூறுகின்றோம்.
சமயமும் இதைக் கட்டுப்படுத்தி
வைத்துள்ளன. தமது பிழைப்புக்காக.

இதற்கு எதிரான கருத்துக்களை நமக்குள் விதைத்து, அடக்கப்பண்ணி குற்ற உணர்வை வளர்த்து நம்மை நோயாளியாக்கி பின் நோய்க்குச் சேவை என்ற பெயரில் பரிகாரமும் செய்கின்றன.

காமம்! நமக்குள் இயங்கும் இயற்கையின் மிகப் பெரிய சக்தி. நம்மால் கட்டுப்படுத்த முடியாதது. நம் கட்டுப்பாடுகளையும் மீறி வெளிவருகின்றது. அடிபணிகின்றோம். அடுத்த கணம் குற்ற உணர்வால் வருந்துகின்றோம், ஏன்?


காம சக்தியின் ஆற்றலை புரிந்து கொள்ளத்தவறியதால் அச் சக்தியின் பலம் கண்டு பயந்து இதை வழிநடாத்த முடியாமல் இதற்கு எதிரான கருத்துக்களையும் அடக்குவதற்கான வழிகளையும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், நம்முள் விதைத்துள்ளனர்.



இது எப்பொழுதும் காம சக்திக்கு எதிராக நம்மை சிந்திக்க செயற்படவைக்கின்றது. காரணம் நம் உள்மனதில் (subconsciousness) இவை ஆழமாக வேருண்டியுள்ளன. காமத்தைக் கண்டிப்பது தன்னைக் கண்டிப்பதற்கு சமம் என்கிறார் ஓசோ.

காம சக்தியை ஒழுங்கு முறையில் வழிநடத்தினால் சிறந்த பலன்களையும் புதிய ஆற்றல்களையும் நமக்குள் வளர்த்திருக்கலாம். இதற்கான வழிகளை முன்னோர்கள் பலர் கண்டுபிடித்துள்ளனர்.   ஓசோ!


இந்த வழிகளையும் வழிகளை கண்டுபிடித்த வழிகாட்டிகளையும் புதை குழிகளிலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்பித்து தூசிதட்டி மீண்டும் நமக்கு வழங்கியுள்ளார். வழிகாட்டியுள்ளார்.

காமமின்றி நாமில்லை. ஆனால் ஒரு உயிரை உருவாக்க மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம். இது மட்டப்படுத்தப்பட்ட பயன்பாடு மட்டுமே. காம சக்திக்கு எதிரான ஆதிக்கம் இருந்த காலங்களில் தம் சந்ததிகளை உருவாக்க மட்டுமே காமத்தைப் பயன்படுத்தினர். இதுவே மனிதருக்கு பழக்கமான வழக்கமான பணியாகிவிட்டது. புதிய உயிர் உருவாவது காம சக்தியின் ஒரு பயன்பாடு மட்டுமே. இதைவிட மனிதரின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கே பயன்படக்கூடியது இக் காம சக்தி.


இதைப்பற்றி சிந்திக்க நேரம் ஏது?

காம கலவையை நம் சக்தியை இழப்பதற்கும் ஆறுதல் அடைவதற்கும் உச்ச இன்பம் என்ன என்பதை அறியாமல் இயந்திரதனமாகப் பயன்படுத்துகின்றோம். உச்ச இன்பம் என்பது நாம் சக்தி மயமாக மாறுவது.


நமது தலையிலிருந்து கால் விரல் வரை அனைத்து இயங்கும் சக்தி நிலை.
சக்தி அலை வடிவங்களாக…உடலை உணராநிலை.
ஏன் நம்மால் உணர முடியவில்லை.
பிரக்ஞையற்றநிலை.
அவசரம். குற்ற உணர்வு.



எவ்வளவு விரைவாக முடிக்கலாமோ அவ்வளவு விரைவாக முடிக்க நினைப்பது. முடிந்தவுடன் விடுதலை பெற்ற உணர்வு. ஆனால் இது தற்காலிக விடுதலை என்பதை மறந்துவிடுவது. ஏனனில் மீண்டும் காமம் நம்மை இழுக்கும்.

பழையபடி…இவ்வாறு
ஒரு வட்டத்தில் இயங்குவதே நம் வாழ்வு.

காம செயற்பாட்டில் உடனடியாக ஆணால் பங்குபற்ற முடியும் என்பதால் ஆணுக்கு அவசரம். பெண்ணுக்கு நீண்ட நேரம் தேவை. இதனால் நீண்ட காலமாக பெண்கள் காமத்தின் இன்பத்தை அனுபவித்ததில்லை. உச்ச இன்பம் (orgasm) ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் வரும் என்பது இயற்கைக்குப் பழசு. மனித மன உலகுக்குப் புதுசு.


ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது. உடன் எழுந்து உடன் இறங்கும். மீண்டும் உடன் எழாது.
பெண்ணினது செங்குத்தானதல்ல. நீண்டதும் படிப்படியாக உயர்ந்தும் செல்லும்
அலை வடிவம் கொண்டது மட்டுமல்ல குறைந்தது ஒரே நேரத்தில் மூன்று தரத்திற்கு மேல் உயரக்கூடியது. ஆகவே ஆணால் திருப்தி செய்யமுடியாது.

காமத்தில் நாம் இன்பம் அனுபவிக்கும் கணம் மூன்று முக்கிய விடயங்கள் நடைபெறுகின்றன. நேரம், தன்முனைப்பு, இயற்கையாக இருப்பது.


நேரம் தெரியாது, மறந்து விடுவோம்.
தன்முனைப்பு இல்லாது இருக்கும்.
நான் என்பது இல்லா நிலை. இயற்கையாக இருப்போம்.


இதை அறிந்து கொள்வதற்கு தடையாக இருப்பது நமது பிரங்க்ஞையற்ற தன்மை. அவசரமின்றி, ஆறுதலாகவும் குற்றவுணர்வின்றி, ஆனந்தமாகவும் ஓவ்வொரு கணத்தை முழுமையாகவும் பிரங்க்ஞையுடனும் காம கலவையில்; பங்குபற்றும் பொழுது உச்ச இன்பம் என்ன என்பதை அறியலாம். சக்தி வெளியேற்றம் இல்லாது தொடர்ந்தும் அனுபவிக்கலாம்.

இது இன்பம் அனுபவிக்க மட்டுமல்ல 

ஆனந்தமான வாழ்வுக்கு மட்டுமல்ல
மானுட விடுதலைக்கும் வழி காட்டும்.
இதுவே ஓசோ நமக்கு கற்பிக்கும் பாடம்.
இது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிவது.

ஓரே ஒர வழி தான் உண்டு. காம கலவையில்; ஈடுபடும் பொழுது பிரங்க்ஞையுடனும் முழுமையாகவும் செயற்படுவது மட்டுமே இதற்கு விடைதரும்.

ஏனனில் உண்மையான அறிவு நமது அனுபவத்திலையே கிடைக்கின்றது. காம கலவையில் உருவாகும் சிறிதுநேர பேரின்பத்திலிருந்தே தியானம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ஒசோ.

காம சக்தி இருபத்தியொரு வயது வரை அதன் உச்ச நிலைக்கு இயற்கையாக உயர்ந்து சென்று பின் கீழ் இறங்கி நாற்பத்தியிரண்டு வயதில் இயற்கையாக காமம்; நம்மைவிட்டு அகன்றுவிட வேண்டும். இது ஓவ்வொரு வயதுக் காலகட்டத்தையும் முழுமையாக அனுபவித்திருந்தால் இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஆனால் என்ன நடைபெறுகின்றது. நாற்பது வயதில் நம்மை விட்டுச் செல்ல வேண்டிய காமம் இறக்கப்போகும் என்பது வயதிலும் நம் மனதை விட்டுச்செல்வதில்லை.
ஏன்?
அந்தந்த காலகட்டங்களில் அவற்றை அனுபவிக்காமல் அச் சக்திகளை அடக்கி பிற விடயங்களுக்கு கவனம் திசை திருப்பப்டுகின்றது. இதற்கு தமது காம சக்தியை வெளிக் காட்டுவதில் இருக்கும் பயமே காரணம். பொதுவாக ஆண்கள் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை காமத்தை பற்றி சிந்திக்கின்றனர். பெண்கள் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை காமத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர். ஆகவே காமத்தை சரியான பாதையில் வழிநடத்துவதே மனிதர்கள் மனச் சோர்வின்றி மன அழுத்தமின்றி ஆனந்தமாக வாழ்வதற்கு சிறந்த வழி.

பிரம்மச்சாரியம் என்பது காம சக்தியை அடக்குவதல்ல. இதை அடக்குவதால் மேலும் காமம் அதிகரித்து காமுகர்களாக உருவாகவே முடியும். இக் காம சக்தி மாற்றப்படக் கூடியது. இவ்வாறு மாற்றுவதன் மூலம் காமம் நம்மிலிருந்து மரங்களிலிருந்து பழுத்த பழங்கள் விழுவது போல் காய்ந்த இலைகள் தானாக விழுவது போல் அகன்றுவிடும். இதன்போது காம சக்தி காதலாக பரிணாமமடைகின்றது.

சிற்றின்பம் என்ற காமத்திலிருந்து (sex) காதல் (love) என்ற என்ற படிகளில் ஏறி பேரின்பம் என்ற அன்புத்தன்மையை (compassion) அடையலாம். புடிகளில் ஏறுவோமா?

==============================

லேபிள்கள்: ஓசோவின் சிந்தனைகள்

காமம் எனில்...


ஒரு மனிதனுக்கு காமம் எப்போது ஆரம்பிக்கிறது? அவ்வுயிர் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே என்கிறது விஞ்ஞானம். தாயிடம் பாலருந்தும்போதே என்பது ஃபிராய்டின் கருத்து. (ஆதாரம் கேக்காதிங்கப்பு... அப்பப்ப படிச்சதுதான்! ) நம்ப லெவலுக்கு ஏன் அதுவரைக்கும் போவானேன்? குத்துமதிப்பா சொன்னா பயக வயசுக்கு வரும்போது என்பது எனக்குத் தெரிஞ்சது. புள்ளைங்களை பத்தி நான் எதுவுஞ்சொல்லலைங்க.. ஆண்டாண்டு காலமாய் அவங்களுக்கு இப்படி அப்படின்னு ஆம்பளைக நாமளே நம்ப ஆசைக.. நிராசைக எல்லாத்தையும் கலந்துகட்டி ஒரு சார்பா பேசுனது போதும். இனியாவது அதை அவங்க வாயாலேயே சொல்லவிட்டு நாம தெரிஞ்சிக்கறதுதான் யோக்கியமான முடிவுங்கறது என் எண்ணம் (இன்னும் மிஞ்சிப்போனா ஒரு 15 வருசத்துக்கு பாத்வாவும், வெளக்குமாரும் பேசுமா?! அதுக்கப்பறம்? )

பசங்க வயசுக்கு வரதா? அதெப்படிங்கறீங்களா? அதுதாங்க ஒடைஞ்ச குரலும் அரும்பு விடும் மீசையுமே காட்டிக்கொடுத்துருமே! அப்ப ஒரு 13 இல்லை 14 வயசு இருக்குமா? சரி. அந்த வயசுல காமம்னா என்னன்னு நெஜமாவே தெரியுமா? அடிக்கடி உம்மணாம்மூஞ்சியா மாற்றதும், மொகத்துல எட்டிப்பார்க்கற பருக்களும் ஹார்மோன் செய்யற வேலையாகவே இருக்கட்டும். அந்த ஹார்மோன் பசிக்கு தீனி என்னவாயிருந்ததுன்னு யோசிச்சா புள்ளைங்களை முழுங்கற மாதிரி பார்க்கறதும், அவங்க அறியாம அவங்களை ரசிக்கறதும்தான்! அதுவரைக்கும் சோட்டாளிகளா இருக்கறவுக இந்த பார்வை வந்ததுக்கப்பறம் ஒரு வித்தியாசமான என்னன்னே தெரியாத அதை தெரிஞ்சிக்கறதுதான் வாழ்க்கைல மொதவேலைங்கற அளவுக்கு அந்த ஈர்ப்பு கெளம்பி பேயாட்டம் ஆடிருது. அவங்க நடக்கறது, பேசறது, சிரிக்கறது எல்லாமே "புதுசு, கண்ணா புதுசு" தான். ஆனா அப்பவும் காமம்னா என்னன்னு தெரியும்னு சொல்லிற முடியுமா என்ன?

அப்பறம் வயசு ஆக ஆக கண்ணால் காண்பதும் மெய், காதால் கேட்பதும் மெய்யென்று படம், புத்தகம்னு மாட்டிகிட்டும், மாட்டாமலும், நம்பளையே சில நேரம் நொந்துக்கிட்டும், பல நேரம் நாமளா இப்படிங்கற அதிர்ச்சியோடவும், அரைகுறை விசயங்களையும் கற்பனைகளையும் கலந்த கூட்டாளிகளோட பண்டமாற்றமும்னு விழுந்து பொரண்டு மொகரை பேர்ந்து முட்டிசில்லு தேய அலைஞ்சு நம்ப ஜெனரல்நாலெட்ஜை வளர்த்தறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருது. இப்படி கஷ்டப்பட்டு தேடிச்சேர்த்த பட்டறிவுங்கறதாலயே(நன்றி: தருமி) இது ஏதோ வாழ்க்கைல அபூர்வமா கிடைக்கக்கூடிய ஒரு பொக்கிஷமாத்தான் தோணுது! அஞ்சு வயசு வரைக்கும் சேர்ந்து இருக்கற ஒரு சகஜீவனை அதுக்கப்பறம் 20 வருசத்துக்கு ஒரு அன்னியஜீவனாகவே அடையாளம் காட்டப்பட்டு பிறகு திடீரென "இருவரும் ஒரே மனுச இனம்தான் ஆகவே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இல்லறத்தை நல்லறமாய்.."ன்னு பொழிப்புரை கேக்கறப்ப தள்ளியிருந்து பார்க்கற விடலைங்களுக்கு கேனத்தனமாய் உளருவதாகத்தான் படும்! வாழ்க்கையின் அடிநாதம்னா தோணும்?!

நம்ப சமூகம் இருக்கு பாருங்க! அதுவாகவும் பாலுணர்வுன்னா என்னன்னு சொல்லித்தராது! நீங்களா தெரிஞ்சிக்க முற்பட்டு முட்டில ரத்தம் வர நின்னாலும் போட்டு தாளிச்சிரும்! அதுக்காக மனுசப்பயக சும்மாவா இருக்கறோம்? இல்லை சமூகத்தை விட்டு ஓடிற முடியுமா? ஒலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பெத்தவுக, கூடப்பொறந்ததுக, பங்காளிகளை ஒதுக்கிவைச்சிட்டு வாழ்ந்துற முடியுமா? வேரோடு புலம் பெயரும் சிறுசுகளுக்குக்கூட இது சிரமமான காரியம்னாலும் ஒட்டுமாங்கனி மாதிரி ஒட்டிக்கிச்சுன்னா கவலையே இல்லை. ஒட்டாம போகவும் வாய்ப்பு ரொம்ப கம்மி. பச்சை களிமண்னுக இல்லையா! ஆனா ஒரு சமூகத்தோட ஒட்டி வளர்ந்துட்ட நம்பள மாதிரி வளர்ந்த மரங்கள வேரோட வேற எடத்துல நட்டா வளர்றதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி. சுட்ட பானைக மாதிரிதான். வளைச்சா ஒடைஞ்சிருமே தவிர வளையுமா என்ன? போற எடத்துல எல்லாம் தமிழ் சங்கங்களும், மன்றங்களும், இந்த வலைப்பதிவுகளும் எல்லாம் ஏதோ ஒரு விதத்துல நம்ப சமூகத்தோட ஒட்டிக்கிறதுக்கான அடையாளங்களே அன்றி வேறென்ன?

நமக்குப்பிடிக்காத கருத்துக்களையும் வறட்டுபிடிவாதங்களையும் வைத்திருந்தாலும்கூட இந்த சமூகத்தை எட்டி ஒதைச்சிட்டு ஓடிற முடியுமா சொல்லுங்க? இங்கனயே இருந்து மாற்றங்களுக்காக குரல் கொடுக்கறதும் கொடுக்கற குரலுக்கு வலிவு இருந்துச்சுன்னா அதுக்கேற்ப வளைஞ்சுகொடுக்கறதும்தான் நம்ப.. நம்ப என்ன.. எந்த சமூகத்துக்கும் வரலாறு. இங்கன இருக்கறவுகளையெல்லாம் கேனப்பயகன்னு சொல்லிட்டு ஃபிரெஞ்சு, லத்தீன் இலக்கியம் வாழ்க்கைதான் ஒலகத்துல பெருசு.. இது உங்க தயிர்சாத வாழ்க்கைக்கு எங்க புரியப்போகுதுன்னு கூவிக்கிட்டி இருந்தாலும் திங்கறதும், கால் கழுவறதும் இங்கதானே? எழுதறதும் அதே நம்ப முட்டாப்பயகளுக்குத்தானே? சொல்ல வந்தது சமூகத்தை திட்டிக்கிட்டு இருந்தாலும் விட்டுட்டு ஓடிறமுடியாதுங்கறது தான்!

அறுத்தெரியமுடியாத பிணைப்புகள் உள்ள இந்த சமூகத்துல இருந்துக்கிட்டு என்ன தப்பு செஞ்சாலும் அது காலப்போக்குல நீர்த்துத்தான் போகுது. காமத்தில் தவறுதல் தவிர! 1000 கோடி சுருட்டுன ஹர்சத்மேத்தாவையும் நாலுபேரு பொருளாதார மேதைன்னுதான் சொல்லறாங்க. கோடி கோடியா சுருட்டி படங்களோட சேதி வந்தாலும் அடுத்த தேர்தல்ல ஜெயிக்கத்தான் செய்யறாங்க! அட இவ்வளவு ஏங்க? அடுத்த நாடுமேல குண்டு போட்டு அழிச்சாலுமே அவங்களை பத்தி பேப்பரும் மக்களும் பேசிப்பேசி மாஞ்சுட்டு அடுத்தவேலைய பார்க்கப்போயிறது இல்லையா? ஆனா பாருங்க. முறையற்ற காமம்கற எடத்துல ஒருத்தன் இடறி விழுந்துட்டான்னா ஊரே அவனைப்போட்டு மிதிச்சிக்கொண்டாடிறுது. அது கிளிண்டனா இருந்தாலுஞ்சரி.. சரவணபவன் அண்ணாச்சியா இருந்தாலுஞ்சரி... என்னவோ ஒலகத்துல அத்தனை மக்களும் ஒழுக்கம் மாதிரி! பார்க்கப்போனா ஒவ்வொரு மனுசமனமும் ஒரு ரகசியகிடங்கு! அதுக்குள்ள இருக்கற அழுக்குகளும் தவறுகளும் பிறழ்வுகளும் சமூகக்கட்டுப்பாடுங்கற ஒரு உறையைப்போட்டு மூடி மறைக்கப்பட்டிருக்கு. அதை மீறி விகாரங்களை வெளிக்கட்டறவங்க காமுகன்னு பெயர் வாங்கிடுறான். உறையை இறுக்கிக்கட்டிக்கிட்டு உலாத்தறாவங்க எல்லாம் நல்லவங்கன்னு பேரு வாங்கிடுறோம்! அது விருப்பப்பட்டு இறுக்கிக்கட்டுனாலும் சரி. கட்டாயத்துல கட்டுனாலும் சரி!

பாருங்க... ஆரம்பிச்சதுல இருந்து கருத்து கந்தசாமி மாதிரியே பேசிக்கிட்டு இருக்கேன்! 'அவன்' என் கல்லூரி கூட்டாளிங்க. படிக்கற விசயத்துல அவன் புலிங்கறதால அந்த விசயத்துல மட்டும் அவங்கூட சேர்றதில்லை. அவனும் என்னை சேர்த்துக்கிட்டது இல்லை. (பின்ன?! என் ஸ்பீடுக்கு அவனால ஈடுகொடுக்கமுடியுமா என்ன?! ) மத்தபடி ஆட்டம், பாட்டம்னா சோடி போட்டுக்கிட்டு அலம்பரதுதான். அவனுக்கு இல்லாத திறமையே இல்லைங்க. காலேஜ் டீம்ல ஓபனிங் பேட்ஸ்மேன்! கல்சுரல்ஸ்ல ஃபேஷன்பெரேட் மாடல். பார்க்க கொஞ்சம் பழம் மாதிரி இருக்கறதால எப்பவும் அவனுக்கு ஸ்டேஜ்ல குர்தாதான்! பய படிப்புல சொல்லவே வேணாம். அவனோட அப்பா ஊருல பெரிய டாக்டர். பரம்பரையா பாரம்பரியம் மிக்க பெரிய குடும்பம். அவன் வீட்டுக்கு நாங்க போறதே தீனி திங்கதான். அவங்கமா அப்படி அருமையா சமைப்பாங்க! வீடு முழுக்க அவங்க கைவண்ணத்துல செஞ்ச கலைப்பொருள்களா இருக்கும்! அம்சமா பாடுவாங்க. வீணை வாசிப்பாங்க. ஒரு நிமிசம் சும்மா இருக்க மாட்டாங்க. அவங்களை பார்த்தாலே எனக்கெல்லாம் ஒரு குற்றஉணர்ச்சி மனசுல வந்துரும். இந்த இளவயசுல இப்படி தத்தியா திரியறமேன்னு! அவனை எனக்கு ஒரு ரோல்மாடல்னு சொல்லமாட்டேன். ஆனா அவனோட வளர்ச்சிய பார்க்கப்பார்க்க மலைப்பா இருக்கும். நான் டிகிரி வாங்கிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு ஆழ்ந்த சிந்தனைல இருந்தப்ப அவன் விசா வாங்கிட்டு அமெரிக்காவுக்கு படிக்க போயிட்டான்! நான் ஒரு வேலை கிடைச்சு அதுல சேரும் போது அவன் புகழ்பெற்ற ஒரு கம்பெனில விஞ்ஞானியா சேர்ந்திருந்தான்! நான் டவுன்பேமெண்ட் கட்டி லோன் போட்டு வாழ்க்கைல என் முதல் இலக்கான யமாஹா 135 வாங்கும்போது அவன் BMW 5series முன்னால நின்னு சிரிச்சுக்கிட்டு இருக்கற போட்டோ அனுப்பியிருந்தான். நான் நல்ல வேலைல செட்டிலானதுக்கப்பறம்தான் கல்யாணம்னு ஒரு முடிவுல இருந்தப்ப அவன் கூடப்படித்த ஒருத்தியையே காதலித்து கல்யாணம் பண்ணியிருந்தான்! எனக்கு கல்யாணம் ஆனபோது அவன் 2 வயது பெண்குழந்தைக்கு அப்பனாகி 4 பெட்ரூம் கொண்ட பெரிய வீட்டுக்கு சொந்தக்காரனாகியிருந்தான். அப்பவே அவன் பேரை யாஹூல போட்டு தேடுனா அஞ்சாரு சுட்டிகள் வரும். அவன் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை தகவல்களை உள்ளடக்கி. எனக்கு இந்த ஒரு விசயத்துலதான் ஆசையா இருக்கும். நம்ப பேரும் என்னைக்கு இணையதளத்துல வரும்னு? ( ப்ளாகர் புண்ணியத்துல இப்ப வரவைச்சுட்டேன்னு வைங்க.. :) ) ஊருல அவன பெத்தவங்களை பார்க்கும்போதே அவ்வளவு சந்தோசமா இருக்கும்!

இப்போ அவன் அமெரிக்காவுல ஜெயில்ல இருக்காங்க! செஞ்ச தப்பு இதுதான்... வலைல ச்சேட் (Chat ) பண்ணும்போது ஒருத்திகூட பேசியிருக்கறான். அவளுக்கு வயசு 13ம்னு சொல்லியிருக்கறா. பேசப்பேச பேச்சு வேறவகையில போயிருச்சி. இவன் பேச்சுல செக்ஸ் Interest காட்ட மறுமுனையிலிருந்தும் சிக்னல் வந்திருக்கு. எங்க சந்திக்கலாம்னு முடிவுசெஞ்சு ஒரு இடத்துக்கு அவ வரச்சொல்ல இவன் அங்க குறிப்பிட்ட இடத்துக்கு அதே நேரத்துக்கு தேடிப்போக வசமா மாட்டிக்கிட்டான். அதுவரை chatல பேசுனது 13 வயசு பெண்ணே இல்லை! காவல்துறை அதிகாரி! இந்த மாதிரி சிறார்களுடன் பாலியல் தொடர்பு வைக்கறவங்களை பொறிவைத்து பிடிக்கறதுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு காவல்துறை அமைப்பு. எல்லாம் ஒரே வாரத்தில நடந்து முடிஞ்சிருச்சு! வழக்கும் நடந்தது. கோர்ட்டுல கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் இவன் chat செய்த அனைத்தும் மற்றும் 2 மணிநேரம் இந்த சந்திப்பிற்காக கார் ஓட்டிக்கொண்டு 80 மைல் தூரத்தில் இருக்கும் அந்த இடத்திற்கு சென்றதும்! அவன் இருக்கும் மாகானத்தில் சிறார்களுடன் பாலியல்தொடர்புக்கான Intention இருந்தாலே போதுமாம். தண்டனையளிக்க! 5 வருடங்கள் சிறைதண்டனை தீர்ப்பானது. இவனைபோலவே அதே வாரத்தில் சிக்கிய இன்னொருவனுக்கு 25 வருடங்கள் தண்டனை. இரண்டாவது முறையாக மாட்டுகிறானாம். இவனது வழக்கு நடந்த 1 வருடத்தையும் சேர்த்து இதுவரை 3 வருடங்கள் ஓடிவிட்டது. அவன் மனைவி 6 மாதத்தில் பெண்குழந்தை இருக்கும் காரணம் காட்டி விவாகரத்து பெற்றுக்கொண்டு பெயரையும் மாற்றிக்கொண்டு வேறு மாகானத்துக்கு சென்றுவிட்டாள். நண்பர்கள் அவனுடன் பேச முயன்றும் அவன் யாருடனும் பேச மறுத்துவிட்டான்!

நீங்கள் இதற்கு 'Pedophilia" என மருத்துவபெயர் கொண்டு இதற்கான காரணங்களை ஆராய முற்படுங்கள். அல்லது இவன் போன்றவர்களை கழுவிலேற்ற வேண்டும் என தீர்ப்பெழுதுங்கள். அல்லது யோனியின் வழியே ராக்கெட் விடும் கதைகளை எழுதும் பின்நவீனத்துவ காலத்தில் இது ஒரு பிற்போக்கான தயிர்சாதவகை எழுத்தென இலக்கியநோக்கில் பாருங்கள். அல்லது உள்மனவிகாரங்களை உளவியல் ரீதியாக பிரித்தாராயுங்கள். எனக்குத்தெரிவதெல்லாம் அவன் செய்த இந்த காரியத்தினால் அவனைச்சார்ந்திருப்போருக்கு ஏற்பட்ட பாதிப்புதான். அவனது தந்தை மருத்துவவேவையை நிறுத்தி சில வருடங்களாயிற்று. அவனது அம்மாவிற்கு இப்போது கோவிலே கதி! எப்பொழுதும் உற்சாகம் கொப்பளிக்கும் அவனது வீடு இன்னும் இயல்பு நிலைக்கு மீண்டபாடில்லை! எங்கோ ஒரு நாட்டில் சிறையில் இருக்கும் மகனைப்பற்றிய அந்த அம்மாவின் மனநிலை என்னவாக இருக்கும்? அதுவும் வெளியில் சொல்லமுடியாத ஒரு குற்றப்பிண்ணனியை கொண்டு?! இப்பொழுது 5 வயதில் ஒரு பெண்குழந்தையை வைத்திருக்கும் அவன் முன்னால் மணைவி இதனை எவ்வாறு எதிர்கொண்டு சாமளித்து மீண்டுவந்திருப்பாள்? இல்லை அவன் தான் என்ன மனநிலையில் 5 வருடங்களை கழிக்கப்போகிறான். விடுதலையானபின்னும் அமெரிக்காவில் அவன் எப்படி வாழப்போகிறான்? ஒரு வாடகை வீடு எடுக்கும்போதுகூட அதற்குமுன் அவனது History அவன் இருக்கும் பகுதியும் காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அவன் இருப்பை பற்றிய தகவலகள் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்படும் நிலையில்!

இந்த உலகம் காதல், கடன், பகை, துரோகம் என அனைத்து தோல்விகளுக்கும் அவமானங்களுக்கும் காலம் என்ற மருந்தை வைத்திருக்கிறது. ஆனால் முறையற்ற காமம் என்ற குற்றத்தினை மட்டும் அது அவ்வளவு எளிதில் மன்னிப்பதே இல்லை. வாழ்க்கை முழுதும் வாழ்க்கைக்கு பின்னும் நிலைத்துதான் விடுகிறது. இப்பொழுதும் அவனது பெயரை கூகுளில் இட்டு தேடினால் 97 சுட்டிகள் கிடைக்கின்றன. அவன் கண்டுபிடிப்பிகளுக்கான காப்புரிமை சுட்டிகள் 6 போக மற்றவை அவன் கைது மற்றும் வழக்கு பற்றிய செய்திகளுடன்!

காமம்... ஒரு பார்வை

கற்பு என்றால் என்ன என நண்பன் கேட்ட பொழுது நான் சொன்ன ஒற்றை வரி பதில் நினைவிற்கு வருகிறது. ‘பெண்ணின் பிறப்புறுப்பு சம்பந்தப்பட்டது அல்ல’ .
நான் இதைச் சொன்னதைத் தொடர்ந்து, ஒரு மிக நீண்ட விவாதம் நடந்தது. கல்வியில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களானாலும் சரி, கல்வியறிவே இல்லாதவர்களானாலும் சரி, இந்த விசயத்தில் அல்லது ‘மேட்டரில்’ தங்கள் கருத்தாக இத்தனை காலங்கள் தங்கள் மேல் திணிக்கப்பட்டதையேத்தான் வெகு இயல்பாக தங்கள் கருத்தாக எடுத்துக்கொண்டு விட்டார்களோ/டோமோ என பேசிப் பார்க்கும்பொழுது தோன்றுகிறது.

கற்பு என்ற உடன், அது பெண் சம்பந்தப்பட்டது மட்டுமே என்பதான கருத்தில் இருந்து வெளியே வர இன்னும் காத்திருக்கிறோம். அரை நூற்றாண்டாவது ஆகும் என்றும் தோன்றுகிறது..

கற்பு துவங்கும் புள்ளி காமம். அதுகுறித்து வெளிப்படையாக ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும் என்றால் கட்சியில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கற்புக்கான விவாதங்களே இப்படி எனில், அதன் ஆதார உணர்வான ‘காமம்’ குறித்துப் பேசுவதற்கான ஆரோக்கியமான சூழல் உள்ளதா போன்ற கேள்விக்கே இடமில்லாதவாறு இருக்கிறது. கத்திமேல் நடக்கும் சமாச்சாரம். ‘கலாச்சார சீரழிவு’ என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு மிக செளகரியமாக வருடங்களைப் பின்னிழுத்துக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேண்டுமா வேண்டாமா என்று பேசிக்கொண்டே இருக்கிறோம்.

ஒன்று சுதந்திரத்தின் வானம்
இல்லை மரணத்தின் பள்ளம்

என்று வைரமுத்து, காட்டு விலங்குகள் வாழ்க்கை குறித்து சொல்லி இருப்பது இங்கே இந்த காமம் குறித்தும் பொருந்துகிறதோ என்று தோன்றுகிறது. ஒன்று, நிறைய உறவுகள் திகட்டத் திகட்டப் பேச்சு என்று காமத்தின் அதீத சுவை. அல்லது பிறன்மனை நோக்கல் பெரும்பாவம் என்ற ஸ்டாண்ட். இரண்டுக்கும் இடையில் சொற்ப சுக சுய சல்லாபம் என வானம்-பள்ளம் கதைதான்.

ஆண் பெண் உடல்மொழி குறித்துப் பேசும் சூழ்நிலை பற்றி இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சங்கப்பாடல்களில் போகிற போக்கில் காமம் குறித்து வெகு இயல்பாகவும் வெளிப்படையாகவும் பேசப்பட்டு வந்திருக்கிறது.

காமம் என்றால் விருப்பம் என்ற ஒரு அர்த்தத்தில்,

“காமம் செப்பாது கண்டது மொழிமோ...” என்பதில் துவங்கி, காமம் என்பது விருப்பம் தானே என்ற வியப்பையும் தருகிறது.(வண்டே உன் விருப்பம் என்பதை தவிர்த்து, நீ கண்டதை மட்டும் சொல்-காமம் செப்பாது கண்டது மொழிமோ.).

கபிலர் ஒரு பாட்டை இப்படி முடிக்கிறார்.

சிறுகோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறுது, காமமோ பெரிதே.

மிகச் சிறிய காம்பு தாங்கி நிற்கும் பெரிய பலாப்பழம் போல,இவளின் உயிர் வலிமையற்றுச் சிறியது. ஆனால் இவள் காமம் மிகப்பெரிது.

என்ற உவமையால் தலைவனை விரைந்து, தலைவியை வரைந்து கொள்க என அழைக்கும் பாடல் ஒரு வகை அது.

காமம் என்ற வார்த்தையை காதல் என்றும் ஒப்பிட்டு நோக்குகிறது பெரும்பான்மை விளக்கப் புத்தகங்கள். அது நாகரீகம் கருதும் வேலை என்றேப்படுகிறது. இதோ,

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

என்ற அற்புதப் பாடலின் அர்த்தம் அதி அற்புதம். காதல் தாண்டிய ஒன்று. அல்குல் வரை பாய்ந்த பாடல். கன்றுக்குட்டிக்கும் கிடைக்காமல், கறந்தவனும் பாத்திரத்தில் வைத்துக்கொள்ளாமல் தரையில் கொட்டிவிடப்பட்ட பாலைப்போல, மாந்தளிர் போன்ற என் மேனியானது கெடுகிறது. அவருக்கும் பயன்படவில்லை. என்று போகிறது அப்பாடல். அதில், திதலை அல்குல்- அதீதம்.

அதற்கடுத்த இப்பாடலைப் பாருங்கள். விளக்கம் ஏதும் தேவையற்று, வார்த்தைகளிலேயே முற்றும் விளங்குகிறது.

முட்டு வேன்கொல்? தாக்கு வேன் கொல்?
ஒரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
‘ஆஅ! ஒல்! எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

ஒளவையார் எழுதிய பாடல். காம நோயால் வருந்தும் தலைவி வெளிப்படுத்தும் மெய்ப்பாடு, படும்பாடு பெரும்பாடு என்பதை உணர்த்தும் பாடல்.

இவை இப்படி என்றால், தலைவன் தன் நிலை கூறுதல் இன்னும் ஆழ அழகு.

இடிக்கும் கேளிர் என்ற பாடலில்,

ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்றுகொளற்கு அரிதே

என்கிறான் வெள்ளி வீதியார் வாயிலாக. அற்புத உவமைகளுள் முதன்மை இதுவே எனப்படுகிறது.

கைகள் இரண்டும் இல்லாத, வாய்பேச முடியாத ஒருவனின் கண்முன், வெயில்பாறைமீது வெண்ணெய் உருகினால், அவனால் அதை எடுத்துக் காக்கவும் முடியாது, பிறரிடம் சொல்லவும் முடியாது. (வாயால் சாப்பிட்டுவிடலாமே என்று சமயோஜிதம் தோன்றுபவர்களுக்கு: கவனிக்க, ஞாயிறு காயும் வெவ்அறை..சூடான பாறை), என மனதில் மருகும் நிலையை கூறிச்செல்லும் அற்புதப்பாடல்.

காமம் களித்துக் கழித்ததை தலைவன் உவகையோடு வெளிப்படுத்தும் ஓர் அற்புதப் பாடல் ..

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறுஇதழ்க் குவளையோடு இடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.

தழுவிக்கொள்ள இனிமைதரும் தலைவியாம். காந்தள் கண்கள், பசுமை முதிர்ந்த முல்லையின் செவ்விப்பூக்கள், குவளைமலர்களுடன் இடையிடையே இணைத்துக்கட்டிய அழகிய மாலைபோல நறுமணம் உடையவளாம். ஹும்ம்ம்.

இயற்கைப்புணர்சிற்கடுத்து, இடந்தலைப்பாடு பொருட்டு தலைவன் கூற்றாக ஆந்தையாரின் பாடல்.

இதோ இன்னுமோர் அற்புதம்.

என்னவளின் மெல்லிய மார்பை ஒரே ஒரு நாள் ஐம்புலனும் சேர்த்துக் கூடப்பெற்றால் போதும். அதன் பின் அரை நாள் வாழ்க்கையைக் கூட விரும்பமாட்டேன். அதுவே போதும்..எனும் பொருளில்,

கேளிர் வாழியோ கேளிர்! நாளும் என்
நெஞ்சுபிணிக் கொண்ட அம்சில் ஓதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் ஆகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே..

நக்கீரர் பாடல் இது. ஆம்.

தளிர்மேனித் தலைவி தன் மேனியின் ஏற்படும் மாற்றங்களாக காமத்தை காரணம் கூறும் இப்பாடலும்

கைவளை நெகிழ்தலும் மெய்பசப்பு ஊர்தலும்
மைபடும் சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி, அது காமமோ பெரிதே..

வாம்.

கடைசிக் காலத்துக் காமம் என்பதையும் பதிந்தே போயிருக்கிறது குறுந்தொகை. சமீபத்தில் ஆந்திர கவர்னர் திவாரியின் லீலைகள் காட்சிகளாக அரங்கேறியதும் எல்லோரும் அனிச்சையாக சொன்ன வார்த்தைகள்- “இந்த வயசுல என்ன பண்ணமுடியும்? அநியாயம்ய்யா”..அந்தக் காட்சிகளை குறுந்தொகை இப்படி முன்பே படிமபப்படுத்திவிட்டது.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

எவ்வளவு உண்மை. முதிய பசு புல்லை முழுவதும் தின்ன இயலாது. வாயால் தடவி அதிலே இன்பம் காணும். காம இன்பமும் முற்றாக அனுபவித்துத் தீராது. தினமும் புதியதான விருந்தாகும் எனும் பொருளில் மிளைக்கந்தன் என்ற புலவர் பாடிய குறிஞ்சிப்பாடல். ஆச்சர்யம் என்னவெனில் இதே புலவர் பாடிய மற்றுமொரு பாடல்,

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணுங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகுமென்று ஆள்மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.

காமம் ஒன்றும் நோயோ வருந்தத்தக்கதோ அல்ல. குளகு எனும் தழையுணவை தின்ற உடன் யானைக்கு மதம் பிடிப்பது போல சுற்றும். அதுபோலத் தனக்கு பிடித்தமான துணையை, தான் காணவேண்டியவரைக் கண்டவுடன் ,வெளிப்படும் உணர்வு காமம்..அவ்வளவே..

என்று சொல்லிப்போய்விட்டார். அவ்வளவேதான்.

எங்கோ ஆரம்பித்த கட்டுரை முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது..காமம் போலவே...