Tuesday, June 5, 2012

மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக மன்னிப்பு கேளுங்கள் !

நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

அன்போடு கட்டித் தழுவுங்கள்
கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். அன்பு பன்மடங்காகும்.

 அன்பான அக்கறை
அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகிறது. பலர் ஆதரவற்றோராக தவிக்கவிடப்படுகிறார்கள். அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால்! குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.

நம்பிக்கை அவசியம்
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.

புரிந்து கொள்ளுங்கள்
புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.

மன்னிப்பு கேளுங்கள்
கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!



மனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ, வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் பாரட்டினாலோ, அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குறை கூறாதீர்கள்
நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம். ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக. அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

நேர்மறையாக கவனியுங்கள்
உங்கள் வாழ்க்கைத்துணை செய்யும் நல்ல செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி பாராட்டுங்கள். உங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் மணம் மிக்க மலர்கள் மலர நீங்கள் ஊற்றும் உற்சாக தண்ணீர் அது. தினம் தினம் நீங்கள் கண்டறிந்து பாராட்டும் பட்சத்தில் உங்கள் மனைவி எந்த தவறான செயலும் செய்ய நினைக்கமாட்டார்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
திருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு காரணமே எதிர்பார்ப்புதான். தனக்கு ஏற்றார்போல தன் மனைவி மாறவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கின்றனர். இது தவறான செயல். உங்கள் மனைவி எப்படிப்பட்ட குணநலன்களுடன் இருக்கின்றனரோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய செயலுக்கு அங்கீகாரம் அளியுங்கள். அப்புறம் பாருங்கள். அலைகடலென வரும் மனைவியின் அன்பில் மூழ்கிப்போவீர்கள்.

மிகச்சிறந்த பரிசு
பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் பெண்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள்.

திறமையை கண்டறியுங்கள்
அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன. பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும். மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

உற்சாக டானிக்
பாராட்டுத்தான் உங்கள் மனைவிக்கு உற்சாகம் தரும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி தழைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


திருமணத்திற்கு அப்புறமும் 'ஸ்வீட் நத்திங்ஸ்' இருக்கலாமே!



How Improve Your Relationship With Your Spouse Aid0174
காதலிக்கும்போது காதலர்கள் நிறைய பேசுவார்கள். உள்ளூர் விசயம் முதல் உலக விஷயங்களை மணிக்கணக்கில் உட்கார்ந்து அலசுவார்கள். ஸ்வீட் நத்திங்ஸ் எனப்படும் இந்த பேச்சின் போது சின்ன விஷயத்தைக் கூட காரணமே இல்லாமல் ரொம்ப நேரமாக வறுத்தெடுப்பார்கள். ஆனால் அதே தம்பதியர் திருமணம் ஆன பின்னால் பேசக்கூட நேரம் கிடைக்காமல் தடுமாறுவார்கள். இதனால்தான் பெரும்பாலான குடும்பங்களில் சிக்கல் எழுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு பேச்சுக்கள் குறைந்து போய் உடல் ரீதியான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பலரின் வழக்கம். இது அசாதாரணமானதல்ல, இயல்பான விஷயமும் கூட. அதேசமயம், அதிக அளவிலான பேச்சுக்கள் கணவன் மனைவியாகட்டும், காதலர்களாகட்டும், உறவை வலுப்படுத்த உதவுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

மன ரீதியான உறவு
உடலும், உடலும் இணைந்தால்தான் உறவா, அது இல்லாமலும் கூட இனிய உறவை அனுபவிக்கலாம். உண்மையில் உடல் ரீதியான உறவுகளை விட இந்த மன ரீதியான உறவுகள்தான் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வலுவாக்கும், இனிதாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் மனைவிக்கு உதவுவது, சின்னச் சின்ன வேலைகளில் இணைந்து ஈடுபடுவது என்று செய்யலாம். இவையெல்லாம் இருவரின் அன்பையும் நெருக்கமாக்க உதவுகிறதாம்.

சின்ன சின்ன உதவிகள் 
வார விடுமுறை நாட்களில் மனைவிக்கு சின்னதாய் சில உதவிகள் செய்தால் அலாதிப் பிரியம் வருமாம். பெரிதாக செய்யக் கூடத் தேவையில்லை. காய்கறி நறுக்கிக் கொடுக்கலாம், அடுப்பில் ஏதாவது வைத்திருந்தால் அதை கவனிக்கலாம். மனைவி கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம். கொடுக்கிற சாக்கில், சின்னதாக ஒரு முத்தம் வைக்கலாம். இதெல்லாம் மனைவியருக்கு அபரிமிதமான சந்தோஷத்தைக் கொடுக்கிறதாம்.

அடடா, இப்படி ஒரு கணவர் கிடைக்க புண்ணியம் செய்திருக்கணும் என்ற சந்தோஷத்தில், சாப்பாட்டில் உப்பு, காரமெல்லாம் கரெக்ட்டாகப் போட்டு சமைத்துக் கொடுப்பார்களாம்.

மனதிற்கு இதமான மலையேற்றம்
வார விடுமுறையில் சினிமா, பீச் என்று போவதைப் போல மலையேற்றமும் நல்லதொரு அனுபவம் தரும். நிறையப் பேருக்கு இந்த டிரக்கிங் தரும் இனிய அனுபவம் குறித்த ஞானம் இருப்பதில்லை. ஆனால் உண்மையில் ஜோடிகளாக இதுபோன்றவற்றில் ஈடுபடும்போது மிகுந்த உற்சாகம் பிறக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது, அனுபவித்தால்தான் தெரியும். கணவனும், மனைவியுமாக போகும்போது நிச்சயம் வித்தியாசமாக உணர்வீர்கள். இது உடல் ரீதியாகவும் இருவரையும் பிட் ஆக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் கொடுக்கும். வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.


காரோட்ட கத்துக்குடுங்க
குக்கிங், டிரக்கிங் என இவற்றில் இப்படி ஒரு கிக் இருக்கிறது என்றால், டிரைவிங் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். உங்களது மனைவி வாரம் முழுவதும் வாகனத்திலேயே செல்பவராக இருந்தால், விடுமுறை நாளில் அவரை உட்காரச் சொல்லி நீங்கள் ஜாலியாக கூட்டிச் செல்லுங்கள். வாகனம் ஓட்டத் தெரியாத மனைவியருக்கு வாகனம் ஓட்டச் சொல்லித் தரலாம். இது காதலையும், அன்பையும் அதிகரிக்க வைக்கிறதாம். பரிவோடும், பாசத்தோடும், கவனத்தோடும், காதலோடும், கவலையோடும் வண்டி ஓட்டச் சொல்லித் தரும் கணவர்களை மனைவியருக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

உடல் ரீதியான உறவை விட இதுபோன்ற அக்கறையான அணுகுமுறைதான் மனைவியருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார்கள். அதுக்காக, வண்டியை இப்படி ஓட்டேன், ஏன் பிரேக் பிடிக்கிறே, கியரைப் போடாதே, யாரைக் கேட்டு திருப்பினே என்று டென்ஷனாக கத்திச் சொல்லித் தர வேண்டாம். அது ‘விபத்தில்’ போய் முடிந்து விடும் என்றும் எச்சரிக்கின்றனர். 

காதல் பார்வையுடன் இதுபோன்ற சுவாரஸ்யங்களையும் கலந்து பாருங்கள், வாழ்க்கை மகா இனிமையாக இருப்பதை உணர்வீர்கள். என்ன இந்த வார விடுமுறையை இன்பமானதாக மாற்ற தயாராகிவிட்டீர்களா?

Saturday, November 20, 2010

பெண்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்!


Coupleமனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.

சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.

இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.

செக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது - திருணம் செய்தவர்களுக்கு. அதே சமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

தன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ அல்லது மனைவி யோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும்.

செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்... இப்படி நிறைய இருக்கிறது.

எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது. செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.


Tuesday, October 19, 2010

மனைவியை மயக்க…!


என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…

1. மதியுங்கள்
வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல
இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.

7. பேசுங்கள்
பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்’
வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்
அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது `வழக்கம்போல்’ இருங்கள்
எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.


திருமணமான புதிதில் கணவன்மார்கள் ஏன் அம்மா பிள்ளையாக இருக்கிறார்கள்